×

ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரியம் மாவட்ட வாரியாக குழு அமைக்க அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலவாரியத்துக்கு மாவட்ட வாரியாக குழு அமைத்து அறிக்கை அளிக்க உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள் பல்வேறு சலுகைகள் பெற முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். அதைதொடர்ந்து ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை காவலர்கள் வரை அனைவரும், ஓய்வு பெற்ற காவலர்களுக்கான தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மற்றும் தமிழகம் டிஜிபி.டி.கே.ராஜேந்திரனிடமும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற  காவலர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக டிஜிபி. டி.கே. ராஜேந்திரன் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்  துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சென்னை மாநகரம், நகரங்கள், மாவாட்ட அளவிலும் ஓய்வு பெற்ற  காவலர்களுக்கான நல வாரிய குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சென்னை மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இந்த குழுவிற்கான இயக்குனர்களாக காவல்  தலைமையகத்தில் உள்ள துணை ஆணையர் ஒருவர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மாவட்ட  அளவில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தெரியவித்துள்ளார்.


 ஓய்வு பெற்ற காவலருக்கான நல வாரிய குழுவில் இயக்குனர், உதவி இயக்குனர், கவுரவ  உறுப்பினர்கள் இடம் பெறுவர்கள். இந்த குழுவில் கவுரவ உறுப்பினர்கள் பதவிக்கு  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளும்  தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் 30ம் தேதிக்குள் விதிப்படி குழுவை  அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நகர அளவில் குழு அமைக்க அந்தந்த நகர காவல்துறை கமிஷனர்களுக்கும், மாவட்ட அளவிலான குழுக்களை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஐ.ஜி களுக்கும் அதிகாரம் வழங்கி டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரிய குழுவை  அமைத்து அவர்களுக்கு தேவையான திட்டங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை  ஆலோசித்து வரும் ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,guards , Retirement, Security, Health and Family Welfare, Tamil Nadu DGP
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...