×

அங்கீகாரம் ரத்தான மருத்துவ கல்லூரி விவகாரம் மாணவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: அங்கீகாரம் ரத்தான மருத்துவக்கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்திய மருத்துவக் கல்லூரியின் விதிகளையும், நிபந்தனைகளையும் சரியாக செயல்படுத்தாததால் கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ரத்து செய்து  கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்தது. இக்கல்லூரியில் படித்து வரும் அர்ச்சனா உள்ளிட்ட 103 பேர், தங்களை வேறு அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் எம்.சி.ஐ மாணவர்களை தனியார் கல்லூரியில்தான் சேர்க்க முடியும் என கொடுத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்பு நேற்று ஒரு கோரிக்கையை வைத்தார். அதில், “தமிழகத்தில் அங்கீகாரம் ரத்தான மருத்துவக் கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (இன்று) அதுகுறித்த விசாரணையை மேற்கொள்வதாக உத்தரவிட்டனர்.


Tags : Supreme Court , Recognition, Medical College, Supreme Court, Investigation
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...