×

சேலம் ரயில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கு வடமாநில கொள்ளையர் 6 பேர் சிக்கினர்: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

சேலம்: சேலம் ரயில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கில், வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் ரயில்வே போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி மாவெலிப்பாளையம் பகுதியில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அடுத்தடுத்த 2 நாட்களில் 13 பெண்களிடம் 37 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுபற்றி ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேரடி விசாரணை நடத்தினார்.  தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இக்கொள்ளையில் வட மாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதன்பேரில், ஒரு தனிப்படையினர் உத்திரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். மற்றொரு தனிப்படையினர் ஆந்திரா, கர்நாடகாவில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நேற்று முன்தினம், கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகப்படும்படி வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை மங்களூரு ரயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அந்த 6 பேரும், மகராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேர் கொள்ளைக்கும்பலை தமிழக ரயில்வே போலீசாரிடம், கர்நாடக ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அந்த 6 பேரிடம், கோவை ரயில்வே டிஎஸ்பி ரமேஷ், ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி ஆகியோர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் கூட்டாளிகள் யார்? வேறு எங்காவது பதுங்கியிருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். மேலும், அக்கொள்ளையர்கள் கொடுத்த தகவலின் பேரில், சோலாப்பூருக்கு ஒரு தனிப்படை போலீசார் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரயில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஓரிரு நாளில் அக்கொள்ளை கும்பலை கூண்டோடு கைது செய்வோம்,’’ என்றனர்.


Tags : Sleeper trainer , Salem, train traveler, case, police
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது