×

திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு ஊரை விட்டே ஒதுக்கப்பட்டது குடும்பம்: புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு

தானே: திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கஞ்சர்பாத் வகுப்பினரிடையே விநோத வழக்கம் இருந்து வருகிறது. அதன்படி புதிதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன்பு தனது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும். இந்த வகுப்பை சேர்ந்த இளைஞர்கள் இந்த வழக்கத்தை எதிர்த்து ஆன்லைன் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினர் இது தொடர்பாக புகார் செய்ததன் பேரில், தானே போலீசார் அம்பர்நாத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கஞ்சர்பாத் வகுப்பில் உள்ள ஜாதி பஞ்சாயத்து தனது குடும்பத்தை கடந்த ஓராண்டு காலமாக சமூக புறக்கணிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த விவேக் தமாய்ச்சிகர் போலீசில் தெரிவித்தார். தனது குடும்பத்துடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கஞ்சர்பாத் வகுப்பினருக்கு ஜாதி பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார். விவேக் தமாய்ச்சிகரின் பாட்டி கடந்த திங்கட்கிழமை இறந்தார். இறுதிச் சடங்கிற்கு கூட யாருமே வரவில்லை. மாறாக ஊர்க்காரர்கள் அதே பகுதியில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் நடத்தியதாக விவேக் தமாய்ச்சிகர் ெதரிவித்தார். சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட குடும்பம் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் கூறினர்.

Tags : protest ,virginity , Virginity test, resistance, case registration
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...