×

கோயில் பணிகளை முடிப்பதில் தொடரும் சிக்கல் மண்டல ஸ்தபதி கூடுதலாக நியமிக்க வேண்டும்: அறநிலையத்துறை கமிஷனர் அரசின் ஒப்புதல் கேட்டு கடிதம்

சென்னை: கோயில்களின் திருப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 மண்டல ஸ்தபதி கூடுதலாக நியமனம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம்.

இந்த கோயில்களில் திருப்பணிகள் தொடர்பான பணிகளை கவனிக்க  தலா 1 மண்டலத்திற்கு 1 மண்டல ஸ்தபதி வீதம் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, கோயில்களில் திருப்பணிகள் குறித்து அறிக்கையை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவின் பேரில் மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினரின் ஒப்புதல் பெற்ற பிறகே திருப்பணிகளை தொடங்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் திருப்பணிகள் மண்டல ஸ்தபதியின் மேற்பார்வையில் தான் நடக்கிறது.

குறிப்பாக, பழங்கால கோயில் கட்டுமான முறைகளில் திருப்பணி நடைபெறுகிறதா, கோயில்களின் கர்ப்பகிரகத்திற்கு ஏற்றாற்போல் மண்டலங்கள் கட்டப்படுகிறதா, கோயில்களில் சிதிலமடைந்த மண்டபங்களை, சிலைகளை சரி செய்வது, பல்லக்கு வாகனங்களில் சீரமைப்பு பணி, கோயில் ஓவியங்கள் பழைமை மாறாமல் புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தபதிகளால் செய்யப்படும் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்யவும், வரைபடங்களை சரிபார்க்கும் பணியிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.தற்போது ஒவ்வொரு மண்டலத்தில் 1 ஸ்தபதி மட்டுமே இருப்பதால், அந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் அனைத்து திருப்பணிகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், 700க்கும் மேற்பட்ட கோயில்களின் திருப்பணிகளை தொடங்க முடியவில்லை. இந்த நிலையில், கூடுதலாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 ஸ்தபதி வீதம் நியமிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் சார்பில் தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு, அரசு சம்மதம் தெரிவித்தவுடன் மேலும் தலா 1 மண்டலத்திற்கு கூடுதலாக மண்டல ஸ்தபதி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய மண்டல ஸ்தபதியின் பொறுப்பு ஆகும். ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 15 முதல் 30 கோயில்களில் ஒரே நேரத்தில் திருப்பணி நடந்தால் ஆய்வு செய்வதில் சிக்கல் உள்ளது.

இதனால், திருப்பணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே மண்டல அளவில் கூடுதல் ஸ்தபதி நியமிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது’ என்றார். ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 15 முதல் 30 கோயில்களில் ஒரே நேரத்தில் திருப்பணி நடந்தால் ஆய்வு செய்வதில் சிக்கல் உள்ளது.

Tags : Problem Regional ,completion ,Appellate Commissioner ,Temple , Temple Work, Continuing Problem, Regional Staff, Charity Commissioner, Government Approval, Letter
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா