×

போபர்ஸ் வழக்கு மேலும் விசாரிக்க கோரிய மனுவை வாபஸ் பெற்றது சிபிஐ

புதுடெல்லி: போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு மேலும் விசாரிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்த மனுவை, சிபிஐ நேற்று வாபஸ் பெற்றது. ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு விடுவித்தது. இந்நிலையில் மைக்கேல் ஹெர்ஸ்மேன் என்ற வெளிநாட்டு தனியார் துப்பறியும் நிபுணர் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த பேட்டியில், போபர்ஸ் ஊழல் தொடர்பாக, தான் மேற்கொண்ட விசாரணையை ராஜிவ் காந்தி அரசு முறியடித்துவிட்டதாக கூறியிருந்தார். இதனால் இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறி போபர்ஸ் வழக்கை மேலும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் மனு செய்தது.

மேலும், போபர்ஸ் ஊழல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி 2ம் தேதி அப்பீல் செய்தது. 13 ஆண்டு காலம் கழித்து அப்பீல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் போபர்ஸ் ஊழல் வழக்கை மேலும் விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ நேற்று வாபஸ் பெற்றது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் மேலும் விசாரிக்க சிபிஐக்கு தனிப்பட்ட அதிகாரம் இருந்தால், இதற்கான மனு நீதிமன்றத்தில் ஏன் நிலுவையில் இருக்க வேண்டும்?’’ என  டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனால் சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டு, இந்த மனு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடக்கும்’’ என்றனர்.

Tags : CBI ,Bofors , The case of Bofors case, filed for inquiry, withdraws, CPI
× RELATED மதுபான முறைகேடு வழக்கில்...