×

சஞ்சய்தத், பேரறிவாளன் விவகாரத்தில் நடந்தது என்ன? தகவலறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையால் வெடித்தது சர்ச்சை

சென்னை: நடிகர் சஞ்சய்தத் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தகவலறியும் உரிமை சட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையால் தற்போது மிகப்பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மும்பையில் கடந்த 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஏகே.47 ஆயுதத்தை வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே சஞ்சய் தத் விடுதலை ஆனார். இது தான் தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியிருக்கும் பேரறிவாளன் ஆகிய இருவருமே தடா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் 9 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை விவகாரத்தில் ஒருதலை பட்சமாகவும் செயல்படுகிறார் என  குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்தநிலையில், சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் மகாராஷ்டிராவின் எரவாடா சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்த தகவல்களை வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து பதில் அளிக்காமல் நிராகரித்து விட்டனர். எனவே, பேரறிவாளன் தரப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்தனர். அதில், “தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் உரிய ஆவணமின்றி கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கப்பட்டதா அல்லது மாநில அரசே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ததா என குறிப்பிட்டு கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய்தத் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். இதில் மத்திய அரசின் தலையீடு கண்டிப்பாக கிடையாது. மாநிலஅரசுதான் தனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது என சிறைத்துறை அதிகாரிகள் தெளிவாக தெரிவித்துள்ளனர். மேலும் சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக அரசு மெத்தனம்:
சஞ்சய்தத் மற்றும் பேரறிவாளன் உட்பட ஆகிய இருவரும் தடா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டனர். ஆனால், மத்திய அரசிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது.  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநரே ஒரு இறுதி முடிவை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு அதற்கான அழுத்தத்தை கொடுக்காமல் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது என்பது சஞ்சய் தத்தின் விடுதலையின் மூலம் தற்போது மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இரண்டுமே சிபிஐ விசாரித்தது:
சஞ்சய் தத் தொடர்பான குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆகிய இரண்டையுமே சிபிஐதான் விசாரணை நடத்தியது. ஆனால் குறிப்பாக பேரறிவாளன் தொடர்பான விவகாரத்தில் மட்டும் வழக்கை சிபிஐ விசாரித்ததால் மாநில அரசு அவரை விடுதலை செய்யும் அதிகாரம் கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சஞ்சய்தத்தை மட்டும், எப்படி மாநில அரசு விடுவித்தது, அதற்கு சிபிஐ எவ்வாறு ஒப்புக்கொண்டது என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. எனவே, ராஜிவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தங்களது நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருவது தெளிவாக தெரியவந்துள்ளது.

Tags : Sanjay Dutt ,Perarivalan , What happened to Sanjay Dutt, Periyalavan, Affair? The Right to Information Act, Exploding, Controversy
× RELATED லியோ – திரைவிமர்சனம்