×

சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு நேரடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே நேரடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத் 2016ம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சயை தாங்களே விடுதலை செய்ததாக தெரிவித்திருக்கிறது.

நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படிதான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், மராட்டிய மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு அனுப்பி இன்றுடன் 250 நாட்களாகி விட்ட நிலையில் அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்கிறார். 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுநர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,government ,Ramadoss ,Perarivalan ,jail , In jail, Perthivelan, 7 people, Tamil Nadu government, release, Ramadoss, assertion
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்