×

திரிணாமுல் கட்சியினர் உடைத்த வித்யாசாகர் சிலையை மீண்டும் நிறுவுவோம்: பிரதமர் மோடி உறுதி

மாவ்: ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவோம்’’ என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பாஜ-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையின்போது, கல்லூரி வளாகத்தில் இருந்த தத்துவஞானி வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. வன்முறையைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஒருநாள் முன்பாக நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:


அமித்ஷா தலைமையில் நடந்த பேரணியின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், திரிணாமுல் கட்சியினருக்கு சரியான பதிலடி தரும் வகையில், மீண்டும் அதே இடத்தில் வித்யாசாகருக்கு ஐம்பொன் சிலையை நிறுவுவோம். உபி, பீகாரில் இருந்து வரும் மக்களை வெளியாட்கள் எனக்கூறி மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு புறக்கணிக்கிறது. அதனால், மேற்கு வங்க விவகாரத்தில், உபியின் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மம்தாவுக்கு சரியான பதிலடி தருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரோ மம்தாவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆட்சி அதிகாரத்தை பற்றிய கவலையில்தான் மாயாவதி இப்படி நடந்து கொள்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.


ஏற்கனவே நான் மேற்கு வங்கத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ரகளை செய்தனர். இன்று (நேற்று) மாலை அங்குள்ள டம்டம்மில் பிரசாரத்திற்காக செல்கிறேன். எனது ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்க மம்தா அனுமதி அளிப்பாரா என்பதை பார்ப்போம். சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி தப்பு கணக்கு போட்டுள்ளன. மத்தியில் வலுவில்லாத அரசு அமைய வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம். வலுவில்லாத அரசை மிரட்டி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் இந்தக் கூட்டணியின் திட்டமே. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vidyasagar ,Trinamool Congress , Trinamul, Vidyasagar, Prime Minister Modi, confirmed
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...