×

தாய்லாந்து கிங் கோப்பை கால்பந்து புதிய பயிற்சியாளர் வெளியிட்ட வீரர்கள் பட்டியல்: தமிழக வீரர்கள் 3 பேர் இடம் பிடித்தனர்

புதுடெல்லி: தாய்லாந்தில் நடைபெற உள்ள  கிங் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கான 37 பேர் கொண்ட உத்தேச பட்டியலை புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வெளியிட்டார். அதில் தமிழக வீரர்கள் தனபால் கணேஷ், நந்தகுமார் சேகர், மிக்கேல் சூசைராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக குரோஷியா நாட்டைச் சேர்ந்த இகோர் ஸ்டிமாக் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தாய்லாந்தில் ஜூன் 5 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ள ‘கிங் கோப்பை’க்கான கால்பந்து போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கான 37 பேர் கொண்ட உத்தேச பட்டியலை இகோர் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வரவேற்றுள்ளார். உத்தேச பட்டியலில் தமிழக வீரர்கள் தனபால் கணேஷ், நந்தகுமார் சேகர், மிக்கேல் சூசைராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி உள்ள இவர்கள் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முறையே சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ், ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

பட்டியலில்  இந்திய, சென்னையின் எப்சி அணிகளின்  முன்கள வீரரான ஜேஜே லால்பெகுலா இடம் பெறவில்லை. கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவர் நேற்று முன்தினம் வங்கதேசத்தில் சென்னையின் எப்சி விளையாடிய போட்டியிலும் பங்கேற்கவில்லை. அடுத்த வாரம் ஜேஜேவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதால் அவர் உத்தேச பட்டியலில் இடம் பெறவில்லை. அவர் மட்டுமின்றி காயம் காரணமாக முன்னணி வீரர்கள் ஹாலிசரன் நர்சாரி,  மந்தர் ராவ் தேசாய், ஆஷிக் குருனியன், நரேந்தர் கெலாட் ஆகியோரும்  இடம் பெறவில்லை. உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே 20ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது. இந்த பட்டியல் அறிவிப்பின் போது பயிற்சியாளர் இகோர், ‘பட்டியலில் இந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஐ-லீக், ஐஎஸ்எல் போட்டிகளில் விளையாடியவர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் சிலருக்கும் பயிற்சி முகாமில் இடம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் பணியில் சேர்ந்ததும் உடனடியாக வரும் இந்த சவாலை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

Tags : coach ,King ,Thailand ,Kingfisher ,Tamil Nadu , Thailand King Cup, Football, Tamilnadu
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...