×

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘கடிவாளம்’ : நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாட்டிலின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஊழியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தபோதும் கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்தநிலையில், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விலையை விட கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சில்லறை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லறை விற்பனையை விட கூடுதலாக விற்பனை செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

இதனை தடுக்கும் பொறுட்டு, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிகழும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் விற்பனை ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும். இந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். கடைப்பணியாளர்கள் ரசீதின் மீது அவர்களின் கையெழுத்திட வேண்டும். மால் ஷாப் உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளால் பணம் பெறுவதற்கான கருவி நிறுவப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை பெறப்படுகிறது என்பது இரண்டு ஒப்புகை சீட்டுக்களாக கிடைக்கிறது. இதில் ஒன்று மதுபானம் வாங்கியவறுக்கு வழங்கப்படுகிறது. மற்றொன்றை விற்பனை தொகை பெற்றதற்கான ஆதார ஆவணமாக பராமரிக்கப்படுகிறது.

ஒப்புகை சீட்டில் அச்சிடப்பட்டுள்ள மின்மயமாக பெறப்பட்ட விற்பனைத்தொகையும் அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் விலையும் வேறுபட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துக்கடைகளிலும் ஒவ்வொரு நாளும் எவ்னென்ன அளவு கொண்ட மதுபானங்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெளிவாக அதற்குரிய ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். விற்பனைத்தொகையை வங்கிகளில் செலுத்தியதற்கான சலான்களை தேதிவாரியாக பராமரிக்க வேண்டும். கடைகளில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளும் ஒவ்வொரு மாதமும் தணிக்கையாளர்களிடம் காண்பித்து ஒப்பம் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


Tags : Taskmakers , Tasmak, fine, Chennai:
× RELATED 500 பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர்...