×

மூன்று நாட்களில் இருந்து 5 நாட்களாக நீட்டித்து தாம்பரம்-நாகர்கோவில் ரயிலை சென்னை எழும்பூரில் இருந்து இயக்க வேண்டும்: தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில்: தாம்பரம் நாகர்கோவில் ரயிலை மூன்று நாட்களில் இருந்து 5 நாட்களாக நீட்டித்து, சென்னை எழும்பூரிலிருந்து இயக்க வேண்டும் என தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பொதுச்செயலாளர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் ரயில்வே முதன்மை இயக்க மேலாளர், சென்னை கோட்ட மேலாளர், திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வார கடைசி நாட்களான வெள்ளி, சனி நாட்களில் தென் மாவட்டங்களிலிருந்து கல்வி, வேலை, வியாபாரம் சம்பந்தமாக சென்னை வந்து செல்லும் தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக தாம்பரம் நாகர்கோவில் ரயில் (22657, 58) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்படுவதால் தென்மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள் தாம்பரத்தில் இருந்து வேறு ரயிலை பிடித்துசெல்லவேண்டியுள்ளது. இதுபோல் சென்னையை சுற்றியுள்ள கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், ராயபுரம், ஆவடி, அம்பத்தூர், பெரியபாளையும், செங்குன்றம், மாதவரம், அயனாவரம், பெரம்பூர் போன்ற இடங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களுக்கு சென்னையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தாண்டி மாலை வேளையில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலை அடைவதற்கு மிகப்பெரிய சவாலாகவும், சிரமமாகவும் உள்ளது.

 இதனால் பயணிகளின் வசதிக்காக, இந்த ரயிலை சென்னை எழும்பூரிலிருந்து இயக்க வேண்டும். மேலும் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலை 5 நாட்களாக நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்ட மக்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக வேளாகண்ணிக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்சேவையை தொடங்க வேண்டும். ெசன்னை எழும்பூரிலிருந்து மாலை 7.50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி ரயில் திருச்சி மதுரைக்கும் இடையே ஒரு மணி நேரம் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த நேரத்தில் இதன்பின்பு புறப்படும் எழும்பூர் நெல்லை ரயில் இதன்முன்பாக சென்று விடுகிறது. இதுபோல் எழும்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் வாஞ்சிமணியாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இடையில் நிறுத்திவைக்கப்படும் அனந்தபுரி ரயிலில் வரும் பயணிகளும், எழும்பூர் திருச்செந்தூர் ரயிலில் வரும் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்த ரயில்களை இடையில் நிறுத்தி வைக்காமல் தொடர்ந்து இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை அதிவேக ரயிலாக இயக்க வேண்டும். இதனால் பயணிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tambaram-Nagercoil ,Chennai Egmore , Tambaram, Nagercoil, Chennai Egmore, Nagercoil:
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...