×

தனுஷ்கோடியில் புயலின் எச்சங்களாக காட்சியளிக்கும் தேவாலய சுவரில் உடைத்து எடுக்கப்படும் கற்கள்: பாதுகாக்க கோரிக்கை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலின் நினைவுச்சின்னமாக விளங்கி வரும் சேதமடைந்த தேவாலயத்தின் கற்களை பெயர்த்து எடுத்து செல்வதை தடுத்து பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டில் அடித்த புயலால் தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கின. சேதமடைந்த பழமையான கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் இன்றும் காட்சியளித்து கொண்டிருக்கின்றன. புயலால் சிதிலமடைந்து காணப்படும் ரயில்வே ஸ்டேஷன், போஸ்ட் ஆபிஸ், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளி, விநாயகர் கோயில், தேவாலயம் போன்றவற்றை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். புயலின் நினைவு சின்னங்களாக காட்சியளித்து கொண்டிருக்கும் இக்கட்டிடங்கள் உப்புக்காற்றினால் சேதமடைந்து வலுவிழந்து வருகின்றன. புயலில் சேதமடைந்த கட்டிடங்களை பாதுகாத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று வரை எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தனுஷ்கோடியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், தேவாலய சுவர்களில் இருக்கும் பவளப்பாறை கற்களை சிறிது சிறிதாக உடைத்து எடுத்து செல்கின்றனர். சுவர்களில் இருக்கும் பவளப்பாறை கற்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் ராமர் பாலம் கற்கள் என்று எடுத்து செல்கின்றனர். சுவரிலுள்ள கற்களை உடைத்து எடுத்து செல்லக்கூடாது என தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சிலர் உடைத்து எடுத்து செல்கின்றனர். தனுஷ்கோடி என்றாலே புயலின் எச்சங்களாய் காட்சியளிக்கும் பழமையான கட்டிடங்கள்தான். இதனை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : storm ,Dhanushkodi , Dhanushkodi, Rameswaram
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...