×

நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் கண்டியப்பேரி-பழையபேட்டை சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுமா?

நெல்லை: நெல்லை டவுன் காட்சி மண்டபம் - அருணகிரி தியேட்டர் வரை குடிநீர் திட்டப் பணிகளுக்கு குழாய்கள் பதிக்கப்படுவதால் நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. கண்டியப்பேரி-பழையபேட்டை சாலையில் எதிரே வாகனங்கள் வருவதை தடுக்க ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.185 கோடியில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே தொடங்கி கல்லணை பள்ளி, அருணகிரி தியேட்டர் வழியாக நெல்லை டவுன் ஆர்ச் வரை 2 கி.மீ., தூரத்திற்கு 600 எம்எம் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் கடந்த 9ம்தேதி தொடங்கியது. இந்த பணிக்காக தென்காசி செல்லும் பஸ்களை கண்டியப்பேரி சாலை வழியாக திருப்பி விட திட்டமிடப்பட்டது.

ஆனால் ராமையன்பட்டியில் இருந்து கண்டியப்பேரி செல்லும் சாலை குறுகலாகவும், பழுதடைந்தும் காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்வதில் காலதாமதம் ஆனது. தற்போது கண்டியப்பேரி சாலையில் பழுதான இடங்கள் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து நெல்லை மாநகர பகுதியில் இன்று (மே16) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும் பஸ்கள், வாகனங்கள் நெல்லையப்பர் கோயில் சன்னதி, சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக திருப்பி விடப்படுகிறது. தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி சாலை வழியாக பழையபேட்டை செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து நெல்லை செல்லும்  பஸ்கள், வழக்கம்போல் குற்றாலம் ரோடு, தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை,   சந்திப்பு வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு செல்கின்றன.

இதனிடையே கண்டியப்பேரி-பழையபேட்டை செல்லும் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது.  தென்காசி, செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள், கண்டியப்பேரி சாலையை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த சாலை, குறுகலாக இருப்பதால் எதிர்திசையில் இருந்து வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த சாலையில் அதாவது தென்காசி மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்கி ஒருவழிப்பாதையாக மாற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கண்டியப்பேரி சாலையில் வாகனங்கள் ரோட்டை விட்டு கீழே இறங்க முடியாத பகுதிகளில் கம்பிகள் நட்டு நெடுஞ்சாலை துறையினர் கயிறு கட்டி உள்ளனர். குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தார்சாலை போடாததால், மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடும்.

இருவழிச்சாலையாக மாற்ற கோரிக்கை


கண்டியப்பேரி- பழையபேட்டை சாலை தற்போது ஒரு வழிச்சாலையாக உள்ளது. எதிரே வாகனங்கள் வந்தால், வாகனங்கள் சாலையை விட்டு இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனனர். மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து ராமையன்பட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் கூறுகையில், கண்டியப்பேரி குளத்தின் கரையில் தடுப்பு சுவர் கட்டினால் சாலை அகலமாவதுடன் வாகனங்கள் எளிதாக சாலையை விட்டு கீழே இறங்கி செல்லலாம். எனவே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையையொட்டியுள்ள மின்கம்பங்களை அகற்றி ஓரமாக நடவேண்டும்.

சந்திபிள்ளையார் கோவில் அருகே நெரிசல்


பேட்டை வழியாக செல்லும் டவுன் பஸ்கள் சந்திபிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தி பிள்ளையார் கோயில் அருகே ஏராளமான இருசக்கர வாகனங்கள் எதிர் திசையில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் அங்கு நின்று ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.


Tags : transporter transit ,street road , Paddy, Transport and Drinking Water Project
× RELATED காரைக்குடி தெருக்களில் பொது பைப்...