×

குப்பைமேட்டில் கிடந்த பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு: திருவண்ணாமலை அருகே பரபரப்பு

வேட்டவலம்: வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருட்டு போன பல கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது பழம்பெருமை வாய்ந்த மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருட்டு போனது. கோயிலின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பச்சை மரகத லிங்கம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மாதவன், டிஎஸ்பி ரமேஷ், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஜமீன் ஊழியர் பச்சையப்பன், ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைமேட்டில் மரகதலிங்கம் இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக அதை கோயில் பழைய குருக்கள் சத்தியமூர்த்தியிடம் காண்பித்ததாக தெரிகிறது. இது கோயிலில் திருட்டுப்போன மரகதலிங்கம் தான் என்பதை அவர் உறுதி செய்தாராம். இதன்பின்னர்  பச்சையப்பன் அந்த லிங்கத்தை ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று தண்ணீர் தொட்டியில் வைத்துவிட்டாராம். இதற்கிடையில் மரகதலிங்கம் கிடைத்த தகவலறிந்த தற்போதைய குருக்கள் சண்முகம் வேட்டவலம் போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சென்று மரகத லிங்கத்தை மீட்டனர். தகவலறிந்த சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி மாதவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று காலை வேட்டவலம் ஜமீன் வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள மனோன்மணியம்மன் கோயிலை பார்வையிட்டார். கோயிலில் கொள்ளையர்களால் துளையிடப்பட்ட சுவற்றையும் பார்வையிட்டார். தொடர்ந்து கோயிலின் எதிரே உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள சுவாமி கற்சிலைகளை பார்வையிட்டு குறிப்பெடுத்தார். பின்னர் மரகதலிங்கத்தை மறைத்து வைத்த தண்ணீர்தொட்டி, லிங்கம் கண்டெடுக்கப்பட்ட குப்பைமேடு ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஜமீன் மகேந்திர பந்தாரியார் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரமேஷ் உடன் இருந்தார்.


Tags : restoration ,Thiruvannamalai , Thiruvannamalai, Marakathalingam, Vattavalam
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...