×

டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்!

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, குறுங்கோள் ஒன்று பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதைபடிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக டைனோசரின் அழிவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.

வடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஷ் என்ற பகுதியில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய பின்னர் ஒருசில மணிநேரத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல்களை இந்த புதைபடிமங்கள் வெளிப்படுத்துவதாக பி.என்.ஏ.எஸ். எனும் அறிவியல் இதழில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டேனிஷ் பகுதியில் கிடைத்துள்ள புதைபடிமங்களைப் பார்க்கும்போது, குறுங்கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குறுங்கோள் விழுந்தபோது அதை மையமாக கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தினால், சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட டேனிஷ் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

“நீரின் இடப்பெயர்வின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன” என்று கூறுகிறார் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் டீபால்மா.

Tags : Dinosaur, destruction, sources
× RELATED கோடை காலத்தில் கொரோனா பரவல் பரவாது...