×

கமல் சர்ச்சை பேச்சு வழக்கு : ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, அவர் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கமல் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

அத்துடன் கமல் மீது திருச்சி மற்றும் அவரைக்குறிச்சி காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா என்பவர் கமலுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கமல் இந்து மதத்திற்கு எதிராக பேசியுள்ளார். இதன் மூலம் நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏன் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுகின்றீர் என்றும் உங்களுக்கம், அவருக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பினார். நான் ஒரு இந்து என்பதால் தார்மீக அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிட எனக்கு முழு உரிமை உள்ளது, அதன் அடிப்படையில் இந்த வழக்கை நான் தாக்கல் செய்தேன் என மனுதாரர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கமல் பேசியதற்கான முழு ஆதாரங்களை ஆக., 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.


Tags : Kamal ,Delhi Patiala , Kamal, Sources, Delhi Patiala Court, Godse
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...