×

புதுகை அரசு மருத்துவமனையில் நோயாளியின் நெஞ்சு பகுதிக்குள் இருந்த கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளியின் நெஞ்ச பகுதியில் இருந்த கட்டியை அகற்றி டாகடர்கள் சாதனை படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பள்ளத்திவயலை சேர்ந்தவர் உடையப்பன் (50) மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட இவர் கடந்த மாதம் 28ம் தேதி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் கொண்டு பரிசோதித்தபோது நெஞ்சு பகுதிக்குள் ஒரு கட்டி மூச்சு குழாயை அழுத்தியிருப்பது தெரியவந்தது. அதனால் படுத்த நிலையில் நோயாளிக்கு அதிகமான மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது என்று டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி மயக்க மருந்து மருத்துவரும் மருத்துவமனையின் முதல்வருமான மீனாட்சி சுந்தரம் தலைமையில் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தினேஷ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, தலைமை மயக்க மருத்துவர் ரவிக்குமார், உதவி மருத்துவர் அறிவரசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 9ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது நோயாளி நலமாக இருக்கிறார். இன்னும் 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யபடவுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக மூச்சு திணறல் இருந்த காரணத்தால் ஆஸ்துமா நோய் என நினைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் ஸ்கேன் மற்றும் மூச்சு குழாய் உதவியுடன் பரிசோதித்தபோது வெளிபுறம் ஒரு கட்டி மூச்சுக்குழாயை அழுத்தி கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை அகற்ற வேண்டுமானால் வலதுபக்க நுரையீரல் இயங்காமல் தளர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது உடலின் இயக்கத்துக்கான ஆக்ஸிஜன் செலுத்துவது சவாலாக இருக்கும். இந்நிலையில் மூச்சுக்குழாயில் இரு துவாரம் உள்ள ஒரு நவீன செயற்கை குழாயை பொருத்தி அறுவை சிகிச்சையின்போது இடதுபக்க நுரையீரல் மட்டுமே இயங்க செய்தோம். அதனால் அறுவை சிகிச்சை எளிதாக செய்ய முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் 2 நுரையீரலையும் இயல்பான நிலையில் இயங்க வைத்தோம். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றார்.

Tags : doctors ,patient ,chest area ,Government Hospital , Pudukottai, doctors, achievement
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...