×

பாலகிருஷ்ணாபுரத்தில் சுகாதாரம் ‘சுமாரா’ கூட இல்லை

திண்டுக்கல்: பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளதுடன் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி. இங்கு பாலகிருஷ்ணாபுரம், மாலைப்பட்டி, அழகம்பட்டி, மாசிலாமணிபுரம், சவுந்தரராஜா ஏர்போர்ட் நகர், என்ஜிஓ காலனி, சிடிஓ காலனி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலே முதல்நிலை பேரூராட்சி அந்தஸ்திற்கு நிகரானது, அதிக வருவாயை ஈட்டக்கூடியது, அதிக ஜனத்தொகையை கொண்டது போன்றவைகளை உள்ளடக்கியது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி. இத்தகைய பெருமைகளை கொண்ட இவ்வூராட்சி பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை கட்டுப்படுத்துவதில் மட்டும் மெத்தனம் காட்டி வருகிறது. ஜன. 1 முதல் தமிழக அரசு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை செய்து, அதை கடைபிடித்து வருகிறது. ஆனால் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் மட்டும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை கட்டுப்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகேயுள்ள கோயில் பின்புறம் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதே இதற்கு சாட்சி. இவற்றை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயானத்தில் தண்ணீர் இல்லை

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாலைப்பட்டியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் உள்ளது. இங்கு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அடிகுழாய் செயல்பாடின்றி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்பவர்கள் தண்ணீர் குடத்தையும் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்து விட்டு கை, கால்களை சுத்தம் செய்ய முடியாமல் திரும்புகின்றனர்.

சீர்குலையும் சுகாதாரம்

இதேபோல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி முழுவதும் பொது சுகாதாரம் சீர்குலைந்து வருகிறது. கிராமங்களில் முறையாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பைகள் சாலை முழுவதும் பரப்பி கிடக்கிறது. குறிப்பாக நாகல்வேனி நகரில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் முதல்நிலை அந்தஸ்து கொண்ட பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பில் மெத்தனம் காட்டி வருவது வேதனையாக உள்ளது. ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் குவிந்து கிடப்பதால் நிலத்தடி நீராதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாலைப்பட்டி மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்ளை அடக்கம் செய்ய செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊராட்சி முழுவதும் குப்பைகளை முறையாக அள்ளாததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது, மாலைப்பட்டி மயானத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதுடன் குப்பைகளையும் முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Balakrishnapuram , Health, Dindigul
× RELATED வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது