தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.  திருவண்ணாமலையை சேர்ந்த இந்திரா காந்தி உள்ளிட்ட 4 ஆசிரியைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 பேரை நீக்க தனிநீதிபதி உத்தரவிட்டிருந்ததார்.

முன்னதாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் வாய்ப்புகள் கிடைத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்ததார். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யவும், அவர்களிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.  தனி நீதிபதி தேசிய தகுதி தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளார். தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என்பதை தனி நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளது. ஆனால், எப்போது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும். தனி நீதிபதி முன்பு தாங்கள் மனுதாரர் இல்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : teachers ,Madras High Court ,qualifying examination , Teachers, Chennai High Court, banned
× RELATED அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை...