×

பிறந்த குழந்தையை விட்டு சென்ற தாய்க்கு 5 ஆண்டு சிறை: பாலக்காடு கோர்ட் உத்தரவு

பாலக்காடு: பிறந்த குழந்தையை காட்டில் விட்டு சென்ற தாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் அகளி ஊராட்சிக்குட்பட்ட கொட்டமேடு பகுதியை சேர்ந்தவர் மரகதம். இவருக்கு பிறந்த பெண் குழந்தையை பூதிவழி காட்டுப்பகுதியிலுள்ள 12 அடி தாழ்வான வாய்க்காலில் தூக்கிவீசி விட்டு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் குழந்தை மயங்கிய நிலையிலேயே காட்டுப்பகுதியில் கிடந்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆடுமேய்க்க சென்ற பாப்பம்மாள் என்பவர் குழந்தையை பார்த்துள்ளார். இது குறித்து அகளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்றைய அகளி போலீஸ் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் குழந்தையை மீட்டு அகளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக அட்டப்பாடி கோட்டத்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்து குழந்தையை குணப்படுத்தினர். இதையடுத்து மலம்புழாவிலுள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் குழந்தையை சேர்த்தனர்.

இந்நிலையில், குழந்தை சுதந்திரத்தினம் அன்று மீட்கப்பட்டதால், குழந்தைக்கு போலீசார் சுதந்திரா என பெயர் சூட்டினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணயைில் தகாத உறவால் மரகதத்திற்கு பிறந்த குழந்தை என்பது தெரிய வந்தது. இதனால் மரகதம் குழந்தையை காட்டில் விட்டு சென்றதும் தெரிய வந்தது. இந்த குற்றத்திற்காக பாலக்காடு நீதிமன்றம் மரகதத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

Tags : baby girl ,Palakkad , Child, prison, mother
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது