×

மகளிர் மன்றங்கள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் மன்றங்களின் பெயர்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்வதாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால், மாவட்டத்தில் பலர் பீதியடைந்துள்ளனர். சிவககங்கை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மன்ற குழுக்கள் உள்ளன. நேரடி அரசு கட்டுப்பாடு, தனியார் நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனம் கட்டுப்பாடு என பல்வேறு வகைகளில் இந்த மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் முதல் சுமார் 20 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். அரசு சார்பில் வழங்கப்படும் கடன் சில பகுதிகளில் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. சில பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இப்பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்துவதற்கான வசூலையும் இவர்களே செய்வர். மகளிர்க் குழுக்களில் உள்ள உறுப்பினர் அடையாள அட்டை, ரேசன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கடன் பெற்றுத்தருவதாக பெறுகின்றனர். மகளிர் குழுவினரும் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. இவ்வாறு பெற்ற விண்ணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனங்கள் நடத்தும் சிட்பண்ட், சிறு சேமிப்பு, ஏலச்சீட்டு உள்ளிட்டவற்றில் மகளிர் மன்ற உறுப்பினர்களை சேர்க்கின்றனர். மகளிர் மன்றத்தை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களே இதுபோல் செய்வதால் யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை. இந்நிலையில், சில மாதங்கள் கழித்து கட்டிய பணம் குறித்து கேட்கும்போதுதான் வசூல் செய்து கொடுத்த நிர்வாகிகள் தாங்கள் தனியார் நிறுவனத்திற்காக வசூல் செய்து கொடுத்தோம் என அவர்கள் குறித்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் சென்றால் சில மாதம் பதில் தெரிவிப்பவர்கள் பின்னர் அலுவலத்தை காலி செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பணம் கொடுத்தவர்கள், வசூல் செய்து கொடுத்தவர்கள் இருவருமே கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சில நிறுவனத்தினர் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பெயர்களில் வங்கிகளில் பல லட்சம் கடன் பெறுகின்றனர். கடனை கட்டாத நிலை ஏற்படும்போது உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வாங்காத கடனுக்கு வரும் நோட்டீஸ் குறித்து வங்கியில் கேட்டால் அங்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இவ்வாறு தொடர்ந்து பலகோடி ரூபாய் மோசடிகள் நடந்து வருவது குறித்து ஏராளமான புகார்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து மகளிர் மன்றத்தினர் சிலர் கூறியதாவது: மகளிர் மன்றங்களில் தொடர்பில் இருப்பவர்களே பணம் வசூல் செய்வதால் சந்தேகப்படவோ, இது எதற்கு என்றோ யாரும் கோள்வி எழுப்ப முடிவதில்லை. மேலும் மன்றங்களில் இருப்பவர்கள் ஏராளமானோர் கிராமப் பெண்கள் என்பதால் அவர்கள் கூறும் அனைத்தையும் எளிதில் நம்புகின்றனர். பணம் பறிபோன பின்புதான் தனியார் நிறுவனத்திற்குதான் வசூல் செய்து கொடுத்தோம் என கூறுகின்றனர். வசூல் செய்து கொடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு அதிகப்படியான கமிஷன் தருவதாக கூறி அவர்களை வசூலில் ஈடுபடுத்துகின்றனர். முன்பு தனியார் சீட்டு நடத்துகிறோம் என வசூல் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தது. தற்போது மகளிர் மன்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோரை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால் அவர்கள் பணி எளிமையாகிறது. இதுகுறித்து மகளிர் மன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் மன்ற செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Women ,folks , Rupee, fraud, womens forums
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ