×

வெண்டிபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கேட்டு 35 ஆண்டாக காத்திருக்கும் மக்கள்

ஈரோடு: சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வெண்டிபாளையம் பகுதி வழியாக செல்லும் வகையில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்டிபாளையம் பகுதியில் மட்டுமே அடுத்தடுத்து 3 ரயில்வே பாதைகள் வருகிறது. இதுதவிர, ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்னை செல்லும் ரயில்களும், எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் ரயில்களும் இந்த ரயில்வே கேட் வழியாகதான் செல்கிறது. இதனால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வெண்டிபாளையம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும்போது நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர் ரோட்டிற்கு செல்பவர்களும், கரூர் ரோட்டில் இருந்து சோலார் வழியாக ஈரோடு நகருக்குள் வருபவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனால் வெண்டிபாளையம் வழியாக அதிகளவில் கார், மினி லாரி, கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது. வெண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இதனால், குப்பை வண்டிகளும் அதிகமாக சென்று வருகிறது.

இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வெண்டிபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பாட்சா கூறியதாவது:ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பம் வசித்து வருகின்றன. ஈரோட்டில் இருந்து கரூர் ரோட்டிற்கு போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வதற்காக கோணவாய்க்கால், வெண்டிபாளையம், பழைய ரயில்நிலையம் வழியை பயன்படுத்துகின்றனர். மேலும், கரூர் ரோட்டில் இருந்து சோலார் வழியாக ஈரோடு வருபவர்களும் சுலமாக வருவதற்கு இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இதே பகுதியில் தான் பொதுப்பணித்துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. ஆனால் இந்த பகுதியில் 3 ரயில்வே பாதைகள் வருகிறது.

இதனால், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை என ரயில்வே கேட் மூடப்படுகிறது. கேட்டை மூடும்போது வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி வழியாக அவசர கால ஆம்புலன்ஸ் செல்ல கூட முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால், சோலார், நாடார்மேடு, கொல்லம்பாளையம் பகுதி வழியாக தான் ஈரோடு மாநகர பகுதிக்குள் வர வேண்டி உள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அமைத்து கொடுத்தால் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால், அதற்கு பிறகு இங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தொடர்ந்து இந்த பகுதி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தி ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags : Vendipalayam , Railway flyover, Salem
× RELATED வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு