பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு கமலுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி

புதுடெல்லி: ‘இந்து தீவிரவாதி’ என பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்த போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே,’ என்றார். இது  கடும் சர்ச்சையானது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு எதிராக பாஜ தலைவர் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கமல்ஹாசனின் பேச்சு தேர்தல் நடந்தை விதிமுறையை மீறியதாகும். தேர்தல் ஆதாயத்திற்காக மதத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பிரசாரத்தில் மதத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகளையும் அதன் வேட்பாளர்களையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். கமல் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அவர் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். அவரது கட்சி அங்கீகாரத்தை தடை செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.  

இந்த வழக்கு, நீதிபதிகள் சிஸ்தானி, ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், ‘‘தமிழ்நாட்டில் நடந்த விஷயத்திற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடாமல், டெல்லிக்கு வந்தது ஏன்? இது டெல்லிக்கு வெளியில் நடந்த விவகாரம் என்பதால் இங்கு விசாரிக்க முடியாது.

கமல்ஹாசன் கருத்துக்கு எதிரான மனுதாரரின் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறோம்,’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து, பேட்டி அளித்த அஸ்வினி உபாத்யாயா, ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

× RELATED பிரதமரிடம் திமுக மனு