×

நெல்லையில் டிடிவி.தினகரன் பேட்டி தமிழகத்தில் மே 23ம் தேதிக்கு பின் அதிமுக ஆட்சி இருக்காது

நெல்லை:  ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நெல்லை வழியாக நேற்று மாலை சென்றார். முன்னதாக அவர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வரும் 23ம் தேதிக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். திமுகவுக்கும், அமமுகவுக்கும் ரகசிய உறவு இருப்பதாக கூறுவது தவறு. திமுகவுடன் எங்களுக்கு எந்த ரகசிய உறவும் இல்லை.

அதிமுகவினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்று பணத்தை அள்ளி வீசினார்கள். ஆனால் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்பது 23ம் தேதி தெரியும். ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் வெற்றி பெற முடியவில்லை. அதேநிலை தான் இந்த தேர்தலிலும் அதிமுகவிற்கு ஏற்படும். நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை குறிப்பிட்டு தீவிரவாதம் என்று கூறியிருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

உளவுப்பிரிவு அறிக்கையால் அதிர்ச்சி
டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த சில தினங்களாக முதல்வர் பழனிசாமி என் மீது மிகுந்த ஆத்திரத்தில் பேசி வருகிறார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கும் என்று உளவுப்பிரிவு அறிக்கை கொடுத்திருப்பதால் முதல்வர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் தான் அவர் என் மீது ஆத்திரப்படுகிறார். 8 நாளில் அவரது பதவி பறி போய் விடும். அவருக்கு புரட்சி பெருந்தகை என்ற பட்டம் பொருந்தாது. ‘’புரட்சி பெரும் தொகை’’ என்பதுதான் பொருந்தும் என்று கூறினார்.

Tags : Dt.Dinakaran ,interview ,Nellai ,AIADMK , Nellai, TT.Dinakaran, Interview, May 23rd, Tamil Nadu, not be the AIADMK, regime
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...