×

பால் ஸ்டர்லிங் அதிரடி சதம் வங்கதேசத்துக்கு எதிராக அயர்லாந்து ரன் குவிப்பு

டப்ளின்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக அயர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன் குவித்தது. அயர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன் குவித்தது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் அதிகபட்சமாக 130 ரன் (141 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கேப்டன் போர்ட்டர்பீல்டு 94 ரன் (106 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பால்பிர்னி 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். வங்கதேச பந்துவீச்சில் இளம் வேகம் அபு ஜாயித் (25 வயது) 9 ஓவரில் 58 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இது அவர் விளையாடும் 2வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது சைபுதின் 2, ருபெல் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 3 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி 4 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.

வங்கதேசம் 3 போட்டியிலேயே 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து 3 போட்டியில் 2 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் தான், கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின.


Tags : Paul Stirling ,Ireland ,Bangladesh , Paul Stirling, Action Century, Bangladesh, Ireland. Run accumulation
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...