×

எச்சிஎல் உடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்த திட்டம்

சென்னை: இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்த இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு (எஸ்ஆர்எப்ஐ), எச்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் நேற்று எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை வணிக திட்டமிடல் அலுவலர் சுந்தர் மகாலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எச்சிஎல் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்குவாஷ் விளையாட்டு வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. சர்வதேச அளவில் நாட்டுக்கு பதக்கங்களை குவித்து வரும் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிக்கான சூழலை தரம் உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு எச்சிஎல் பணியாற்றி வருகிறது.

உலக தரத்திலான போட்டிகளை நடத்துவது, பயிற்சி அளிப்பது, உடல்தகுதி மற்றும் மனநிலை மேம்பாட்டு பயிற்சி, சத்தான உணவுகள் அளிப்பது ஆகியவை திட்டத்தின் முக்கிய இலக்குகள். மற்ற போட்டிகளுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருப்பது போல் ஸ்குவாஷ் விளையாட்டுக்கும் சிறந்த பயிற்சியாளர்களை நியமிப்பது அவசியம். இளம் வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும். இவ்வாறு சுந்தர் மகாலிங்கம் கூறினார்.

இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பின் தலைவரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான தேபேந்திரநாத் சாரங்கி பேசும்போது, ‘கூட்டமைப்பில் இப்போது 2000 வீராங்கனைகள் உட்பட 7000 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 6000 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள். எச்சிஎல் நிறுவனத்துடன் ஓராண்டுக்கு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்த உள்ளோம்.

அதற்காக 32 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சர்வதேச ரேங்கிங் பட்டியலில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பதிவு செய்துள்ள வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையை 8000ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல் அதிகளவில் தேசிய, சர்வதே அளவிலான நடுவர்களை உருவாக்குவோம். விரைவில் நடைபெற உள்ள ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் குறைந்தது 10 பதக்கங்கள் பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். தேசிய, சர்வதேச அளவிலான ஸ்வாகுஷ் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும். 2022ம் ஆண்டுக்குள் சர்வதேச தரத்தில்  ஸ்குவாஷ் வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கும்’ என்றார். இந்த சந்திப்பின்போது தேசிய பயிற்சியாளர் சைரஸ் போன்ச்சா உடன் இருந்தார்.

Tags : squash game ,India ,HCL , HCL, combined, in India, to develop a game of squash, upgrade
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!