×

பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

பிரிஸ்டல்: பாகிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 359 ரன் என்ற இமாலய இலக்கை மிக எளிதாக எட்டியது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 151 ரன் (131 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 6வது சதமாகும்.

ஹரிஸ் சோகைல் 41, கேப்டன் சர்பராஸ் அகமது 27, ஆசிப் அலி 52, இமத் வாசிம் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீசில் கிறிஸ் வோக்ஸ் 4, டாம் கரன் 2, மொயீன் அலி, டேவிட் வில்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 17.2 ஓவரில் 159 ரன் சேர்த்தது. ராய் 76 ரன் (55 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), பேர்ஸ்டோ 128 ரன் (93 பந்து, 15 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 43 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 37 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து அணி 44.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. மொயீன் அலி 46 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க (முதல் போட்டி மழையால் ரத்து), 4வது போட்டி நாட்டிங்காமில் நாளை நடைபெற உள்ளது.

Tags : Pakistan , Pakistan, defeat, England
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்