பைக்குடன் பைக் உரசிய தகராறில் ஓட்டல் ஊழியருக்கு கத்திக்குத்து: ரவுடி உள்பட 2 பேர் கைது

சென்னை: பைக் மீது மற்றொரு பைக் உரசிய தகராறில் ஓட்டல் ஊழியரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செம்பரங்குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தி.நகர் பர்கிட் சாலையில் பைக்கில் சென்றபோது, முன்னால் 2 பேர் சென்று கொண்டிருந்த ஒரு பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில், விக்னேஷை இருவரும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

படுகாயமடைந்த விக்னேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரின்பேரில் மாம்பலம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, மாம்பலம் காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் இருக்கும் பிரபல ரவுடியான தி.நகர் ஜிஎன்செட்டி சாலையை சேர்ந்த சந்துரு (40) மற்றும் அவரது மைத்துனர் கணேஷ் (32) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.

Tags : knife staff , Biking, bike skinny, dispute, hotel staff, knife
× RELATED பைக் மோதி படுகாயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி