×

கோயம்பேடு பகுதியில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 600 குடிநீர் கேன்கள் பறிமுதல்: பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை, மே 16: கோயம்பேடு பகுதிக்கு மினி வேன்களில் நேற்று காலை வந்த தரமற்ற 600 தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை நகர பகுதிகளில் காலாவதியான, தரமற்ற தண்ணீர் கேன்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத, தரமற்ற தண்ணீர் கேன்கள் சென்னை நகரில் விற்பனைக்கு மினி வேன்களில் கொண்டு வரப்படுவதாக ேநற்று காலை 6 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று காலை 8 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் 3 பேர் குழுவினர், அவ்வழியே மினி வேன்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர்.



இச்சோதனையில், மினி வேன்களில் கொண்டு வரப்பட்ட 600 தண்ணீர் கேன்கள் தரமற்ற, காலாவதி ஆனவை எனத் தெரியவந்தது. மேலும், அந்த கேன்களில் ஒட்டப்பட்டு இருந்த தனியார் நிறுவன லேபிள்களும் போலியானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து மினி வேன்களையும் 600 தண்ணீர் கேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட டிரைவர்களிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், கோயம்பேடு திரையரங்கம் அருகே கடந்த 8-ம் தேதி அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 600 தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : label ,area ,Koyambedu ,Department of Defense Department , Coimbatore, fake label, security department, officials, action
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...