×

பம்மல் நகராட்சி 1வது வார்டு சங்கர் நகரில் சாலையை ஆக்கிரமித்து தோட்டம்: அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு, கட்டுமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையை ஆக்கிரமித்து, பிரபல கட்டுமான நிறுவனம் தோட்டம் அமைப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியான சங்கர் நகர், கிழக்கு பிரதான சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

பம்மல் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. சங்கர் நகர் கிழக்கு பிரதான சாலையின் முக்கிய இணைப்பு பகுதியின் ஒரு பகுதியை, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு கிரவுண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி தனது கைவசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த அரசு நிலத்தை ஆளுங்கட்சி பிரமுகரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் கொடுத்து தனியார் கட்டுமான நிறுவனம் விலைக்கு வாங்கியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அந்த பிரதான சாலை பகுதியில், பிரபல கட்டுமான நிறுவனம் சார்பில் மரம், செடி கொடிகளுடன் தோட்டம் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பம்மல் நகராட்சி நிர்வாகமோ அல்லது வருவாய் துறையினரோ, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கட்டுமான நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசுக்கு சொந்தமான பிரதான சாலையை உடனடியாக மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையை ஆக்கிரமித்து விற்ற பிறகும் நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தங்களது பங்கிற்கு பெருந்தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதேபோல் மின்வாரிய அதிகாரிகளும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு அரசு புறம்போக்கு நிலங்களுக்கு லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்குகின்றனர்.
 
பம்மல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான சாலை, குளம், ஏரி உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களை சமூக விரோதிகள் மடக்கி வைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அரசு புறம்போக்கு நிலங்களை விற்பதை மட்டுமே முழுநேர வேலையாக செய்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் அரசு நிலங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு, அரசு நிலங்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும். மேலும் இதுபோன்று அரசு நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்யும் தனி நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து பெருகி வரும் சட்ட விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : municipality 1st ward ,town ,road ,government ,Shankar ,construction company , Pamlal municipality, 1st ward, road in the city of Shankar, occupying the garden, construction company, allegation
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...