பைக் மீது லாரி மோதி விபத்து ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் சாவு: டிரைவரிடம் விசாரணை

அண்ணாநகர்: அரும்பாக்கம், ஷெனாய் நகர், ஜெயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (29). நீச்சல் வீரர். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்றார். இதையடுத்து அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறையில் சென்னைக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனது உறவினரை பார்த்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் அருகில் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் சிமெண்ட் கலவை லாரியை பாலகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி மீது இவரது பைக் உரசியதால் நிலைதடுமாறி பாலகிருஷ்ணன் கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (32) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Lorry crash ,bike bike gold winner ,Asian ,swimming competition , Bike, truck collision, accident, Asian swimming competition, golden player, death
× RELATED ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி