×

பள்ளி வாகனங்களில் சிசிடிவி பொருத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மே 16: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எஸ்.கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு:  கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி வேனில் சென்ற 4 வயது குழந்தைக்கு அந்த வேனின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.


 எனவே, பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவியையும், வாகனத்துக்குள் கண்காணிப்பு கேமராவையும் பொருத்த வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழக கல்வித்துறை செயலாளர், போக்குவரத்து இயக்குனர் உள்ளிட்டோருக்கு கடந்த ஏப்ரல் 3ம் தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Government ,Supreme Court , School, vehicles, CCTV, court order
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்