×

அடிப்படை வசதிகள் இல்லாததால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அவதி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். தற்போது ேகாடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
முக்கடலில் நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம், சூரியன் உதயம், மறைவு மற்றும் கடலில் படகு மூலம் பயணம் செய்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை அடைவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்து வருகிறது. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என 3 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது கோடை சீசன் என்பதால், காலை 6.30 மணியில் இருந்தே படகு டிக்கெட் வாங்க சுற்றுலா பயணிகள் சுமார் 2 கி.மீ தூரத்தில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். ஆனால் படகு டிக்கெட் 8 மணிக்குத்தான் வழங்கப்படும்.

மேலும் முதல் படகு சவாரி 8.30 மணிக்குதான் தொடங்குகிறது. ஆனால் காத்திருக்கும் பயணிகளுக்கு கழிவறை, குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. படகுத்துறை பகுதியின் உட்பகுதியில் கழிவறை உள்ளது. ஆனால் இந்த கேட் 8 மணி வரை திறக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை தீர்க்க முடியாமலும், தாகத்தை தணிக்க முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே காலையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வெளிப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அல்லது காலை 6.30 மணியளவில் படகுத்துறை கேட்டை திறந்து, சுற்றுலா பயணிகள் கழிவறை மற்றும் குடிநீர் வசதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பக்தர்களுக்கு இடையூறு


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. மாலை வேளைகளில் சமய சொற்பொழிவு,  கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் கோயில் செல்லும் சன்னதி தெரு ஆக்ரமிப்பில் சிக்கித்தவிக்கிறது. சன்னதி தெரு மற்றும் கலையரங்கம் முன்  மாலை வேளைகளில் இருச்சக்கர வாகனங்களை அதிகம் நிறுத்தி செல்கின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தும் கண்டு கொள்வதில்லை.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களை இடையூறாக நிறுத்தி வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை மாற்ற போலீசார் கூறினாலும் யாரும் செவிசாய்ப்பதில்லை.  எனவே கூடுதல் போலீசார் நியமித்து பாதுகாப்புக்களை அதிகரிக்க வேண்டும். பக்தர்களின் இன்னல்களை களைய வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kanyakumari ,tourist facilities ,facilities , Kanyakumari, Tourists
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!