×

நெல்லையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.258 கோடியில்  அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 கோடி  லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள்  பேட்டை பகுதியில் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. இதனைத்தொடர்ந்து  நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே தொடங்கி கல்லணை பள்ளி, அருணகிரி  தியேட்டர் வழியாக டவுன் ஆர்ச் வரை 2 கி.மீ., தூரத்திற்கு 600 எம்எம்  குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் கடந்த 9ம்தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து அருணகிரி தியேட்டர் விரிவாக்க சாலையில் மட்டும் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ராமையன்பட்டியில் இருந்து கண்டியப்பேரி செல்லும் சாலை குறுகலாகவும், பழுதடைந்தும் காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்வதில் காலதாமதம் ஆனது. தற்போது கண்டியப்பேரி சாலையில் பழுதான இடங்கள் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து நெல்லை மாநகர பகுதியில் நாளை (16ம்தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேட்டை சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம் செல்லும் பஸ்கள்,  வாகனங்கள் நெல்லையப்பர் கோவில் சன்னதி, சந்தி பிள்ளையார் கோவில், காட்சி  மண்டபம் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தென்காசி மார்க்கமாக  செல்லக்கூடிய பஸ்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி,  கண்டியப்பேரி சாலை வழியாக பழையபேட்டை செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  போக்குவரத்து  மாற்றம் தொடர்பாக நெல்லை வண்ணார்பேட்டை பாலம் மற்றும் டவுன் ஆர்ச் உள்ளிட்ட  முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.


Tags : nellai, traffic, water
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!