×

போலி அறிக்கை விவகாரம்: சீருடை பணியாளர் தேர்வாணைய செயலர் ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உறுப்பினர் செயலராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஐடி கணிதப்பிரிவு பேராசியர் அறிக்கை பெற்றதாக கூறி போலி அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் சிக்கிய ஐ.ஜி. மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீருடை பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண் விவகாரத்தில், இல்லாத ஒரு பேராசியர் பெயரில் போலியான அறிக்கையை தாக்கல் செய்த விவகாரத்தில் ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. காவலர் எஸ்.அருணாச்சலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2018ம் ஆண்டு தமிழக காவல்துறையில் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் சரியான பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைப் பரிசீலிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த விடை தவறானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி எது சரியான விடை என்பதை ஐ.ஐ.டி-யில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத் தாக்கல் செய்யும்படி சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஐ.ஐ.டி.யில் கணிதப் பிரிவு பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அரசின் விடை தான் சரி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஐ.ஐ.டி.யில் டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அப்படி ஒரு நபர் இதற்கு முன் பணியாற்றி ஓய்வு பெறவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற நகலை மனுதாரர் தாக்கல் செய்தார். மேலும், அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் புகார் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலி ஆவணங்களை தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி ஆகியோர் மீது மோசடி கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

அதில் ஆலோசகர் ஜி.வி.குமாரை போலீசார் கைது செய்தனர். இதனை கேட்டு அதிச்சியடைந்த நீதிமன்றம் இது சம்பந்தமான விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு சீருடை தேர்வாணைய ஐ.ஜிக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக இருந்த குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் தான் ஐஐடி பேராசிரியர் மூர்த்தியை அறிமுகம் செய்து ஒரு தவறான அறிக்கையை கொடுத்து தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், உள்துறை செயலர் நிரஞ்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய உறுப்பினர் செயலராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IG Sentharmarikannan , IG Senantharikannan, Workplace Transfer, Fake Report, Fake Professor, High Court
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...