×

கர்தார்பூர் சாலைப்பணிகள் துவங்க மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் சாலைப்பணிகள் துவங்க இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குருநானக் ஜெயந்தியன்று  பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் எல்லை தாண்டி குருநானக் நினைவிடத்துக்கு சென்று வாழிபாடு நடத்துவார்கள்.  இந்நிலையில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தேரா கோயிலில் இருந்து குருத்வாரா தர்பார் சாகிப்பை இணைக்கும் வகையில் கர்தார்பூர் சிறப்பு வழித்தடத்தை அமைக்க இந்தியாபாகிஸ்தான் அரசுகள் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் இருநாட்டு பகுதிகளிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் பிப்.14ல் ஜம்மு-- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதால் கர்தார்பூர் சாலைப்பணியில் தேக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தனி நாடு கோரும் பாகிஸ்தான் பிரிவினைவாதிகள் அதிகம் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதனால் கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அமைய உள்ள புதிய அரசுடன் கர்தார்பூர் சாலைத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


Tags : Pakistan ,negotiations ,Kardharpur Roads , Kardarpur Roadwork, Negotiation, Pakistan, Project
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...