×

மும்பையிலிருந்து குவியும் பலாப்பழ ஆர்டர்கள்: தத்தளிக்கும் புதுகை விவசாயிகள்

புதுக்கோட்டை: மும்பையில் புதுக்கோட்டை பலாப்பழங்களுக்கு மவுசு அதிகம். ஒவ்வொரு சீசனின் போதும் மும்பையிலிருந்து வியாபாரிகள், நேரடியாக புதுக்கோட்டைக்கு வந்து சரக்கு லாரிகளில் பலாப்பழங்களை மொத்தமாக ஏற்றிச் செல்வார்கள். இந்த வருடமும் தொடர்ந்து ஆர்டர் கொடுக்கின்றனர். ஆனால், அனுப்புவதற்கு எங்களிடம் பழம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பலாப்பழம் சீசன் தொடக்கத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளிலும் பலாப்பழம் வியாபாரம் களைகட்ட ஆரம்பிக்கும். இங்குள்ள சந்தைகளில் ஆயிரக்கணக்கான பலாப்பழங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு சந்தை முழுவதும் பலா மணம் வீசும். முதல் நாள் இரவே சந்தையில் வெளியூர் வியாபாரிகள் முகாமிட்டு விடுவார்கள். அதிகாலையில் ஏலம் நடைபெறும். வெளியூர் வியாபாரிகளுக்கும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் இடையே அந்த ஏலம் நடக்கும். அதெல்லாம் முடிந்து இறுதியாக பேரம்பேசி, ஒருவழியாக விடிவதற்கு முன்பே வாகனங்களில் பலாப்பழங்களை ஏற்றிச்சென்று விடுவார்கள். ஆனால், இன்று இங்குள்ள சந்தைகளில் ஒரு வெளியூர் வியாபாரியைக் கூட பார்க்க முடியவில்லை. 60 சதவிகித பலா மரங்களை கஜா புயல் தன் கோரத்தாண்டவத்தால், வேரோடு சாய்த்தது. ஒவ்வொரு வருடமும் பலா சீசனின் போதும் களைகட்டும் சந்தைகள் கஜா புயல் எதிரொலியாக இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.

இதுகுறித்து பலா வியாபாரிகள் கூறியதாவது: ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல் என இங்கு 20க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பலா கமிஷன் கடைகள் இருக்கின்றன. மாவட்டத்தில் விளையும் பலாப்பழங்கள் மொத்தமாக, கமிஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும். இங்கிருந்து வெளியூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். இந்த வருடம் கஜா புயல் வீசியதால், சந்தைக்கு வரும் பழங்கள் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. ஒரு கடைக்கு மட்டும் தினமும் 5 ஆயிரம் பழங்கள் வரையிலும் வரத்து இருக்கும். இன்றைய நிலையில் ஒரு கடைக்கு 50 முதல் 100 பழங்கள் மட்டுமே வருகின்றன. வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி எல்லாம் இருப்பதால், அதை நாம் அனுப்ப முடியவில்லை. குறைந்த அளவில் சந்தைக்கு வரும் பழங்களை உள்ளூரில் வைத்து விற்பனை செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. உள்ளூரில் விற்பனை செய்வதால், விலை குறைந்தே விற்பனையாகிறது. மும்பையில் புதுக்கோட்டை பலாப்பழங்களுக்கு மவுசு அதிகம். ஒவ்வொரு சீசனின் போதும் மும்பையிலிருந்து வியாபாரிகள், நேரடியாகப் புதுக்கோட்டைக்கு வந்து சரக்கு லாரிகளில் பலாப்பழங்களை மொத்தமாக ஏற்றிச் செல்வார்கள். இந்த வருடமும் தொடர்ந்து ஆர்டர் கொடுக்கின்றனர். ஆனால், அனுப்புவதற்கு எங்களிடம் பழம் இல்லை. வெளியூர் வியாபாரிகள் அனைவரிடமும் அடுத்த வருடம் கண்டிப்பாக அனுப்பிவைப்பதாகக் கூறி சமாளித்து வருகிறோம். இந்த வருடம் எங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுவை அதிகம் கொண்டது என்பதால், வெளியூர்களில் எப்போதும் புதுக்கோட்டை பலாப்பழங்களுக்கே மவுசு இருக்கும். வெளியூர்களில் இந்த வருடம் இங்கிருந்து பழங்கள் அனுப்பப்படாததால், பண்ருட்டி பழங்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்து விற்பனையாகவும் வாய்ப்புள்ளது. பண்ருட்டி பழங்களை வாங்கிவந்து நாங்கள் விற்பனை செய்வதில்லை” புதுக்கோட்டையில் 20 கிராமங்களில் ஹெக்டேர் கணக்கில் பலா சாகுபடி நடக்கிறது. இங்குள்ள கிராமங்களில் வீட்டுக்கு வீடு சராசரியாக 2 முதல் 5 பலா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மரங்களில் பிஞ்சுவிடும் சமயத்தில் புயல் அடித்ததால், பிஞ்சுகள் அனைத்தும் உதிர்ந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சாய்ந்த மரங்களை எல்லாம் நிமிர்த்தி வைத்துள்ளோம். முறிந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டுள்ளோம். தற்போது, மெள்ள மெள்ள இலைகள் துளிர்க்க ஆரம்பித்து வருகின்றன. அடுத்த வருஷ சீசனின் போதுதான் காய்ப்புக்கு வாய்ப்புள்ளது. இந்த வருடம் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பகுதி தப்பிய சில பலா மரங்களிலிருந்து மட்டுமே குறைந்த அளவிலான காய்ப்பு இருக்கிறது. பலாவை நம்பி இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளோம். காய்த்து இருக்கும் பழங்களை அறுவடை செய்து வியாபாரிகளிடம் விற்று அன்றாட பிழைப்பு நடத்தி வருகிறோம். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பலா மரங்கள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படவில்லை. பண்ருட்டிக்கு பிறகு புதுக்கோட்டையில்தான் பலா அதிகம் விளைவிக்கப்படுகிறது. எனவே, பலா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு சரியான நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஒட்டுரக பலா கன்றுகளை அரசு இலவசமாக வழங்கவேண்டும்” என்கின்றனர்.

Tags : Mumbai , Pudukottai, Mumbai, pala
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...