×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் 500 பேர் வரை பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிகோரி மனு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிகோரி தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ல் நடந்த பேரணியின்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்குகளை ஐகோர்ட் கிளை 2018, ஆகஸ்ட் 14ல் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சிபிஐ 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த காலக்கெடு 2018, டிசம்பர் 14ல் முடிந்தது.  

காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு காவல் அதிகாரி மீது கூட சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பரம் நகர், விவிடி சந்திப்பு அல்லது எஸ்விஏ பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் ஏப்ரல் 26ல் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிபதிகள் நிபந்தனையுடன் அனுமதி


இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிபதிகள் நிபந்தனையுடன் அனுமதித்தனர்

நினைவஞ்சலி கூட்டம் தொடர்பான நிபந்தனைகள்


* நினைவஞ்சலி கூட்டத்தில் 250 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
* பெல் ஓட்டலில் காலை 9-11 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
* நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்வோரின் பட்டியலை வழங்க வேண்டும்.
* கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.


 500 பேர் வரை பங்கேற்க அனுமதி


இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான  கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : Madurai Madurai ,Thoothukudi , Memorandum, Meeting, Judges, Condition, Permit, Tuticorin Gunfire, Pending
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...