×

நெல்லை சந்திப்பு ரயில் நிலைய முன்பதிவற்ற மையத்தில் பயணிகள் அலைமோதல்

நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலைய புதிய கட்டிட முன்பதிவு மையம் மூடப்பட்டதால் நேற்று பழைய கட்டிடத்தில் டிக்கெட் எடுக்க கூட்டம் அலைமோதியது. பலர் டிக்கெட் எடுக்காமல் ஓடிச்சென்று ரயிலில் ஏறினர். நெல்லை ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் ஏற செல்கின்றனர். இவர்களில் முன்பதிவற்ற டிக்கெட் எடுத்து செல்வோர் எண்ணிக்கை அதிகம். அதிலும் காலை, மாலை வேளைகளில் அதிகமான பயணிகள் முன்பதிவற்ற மையங்களை முற்றுகையிட்டு டிக்கெட் எடுத்து செல்வர். பீக் அவர்ஸ் நேரங்களில் மட்டும் புதிய கட்டிடத்தில் உள்ள முன்பதிவற்ற மையத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயில்வே துறையில் ஆட்பற்றாக்குறையால் முன்பதிவற்ற கவுன்டர்களில் டிக்கெட் கொடுக்க போதிய ஊழியர்கள் இருப்பதில்லை. இதனால் சில சமயங்களில் புதிய கட்டிடத்தில் உள்ள கவுன்டர் மூடி கிடக்கிறது. நெல்லையில் நேற்று காலையில் செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில் மற்றும் கோவை ரயில்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில், கூட்டம் அலைமோதியது. பலர் டிக்கெட் எடுக்க புதிய கட்டிட நுழைவாயிலுக்கு சென்றபோது அங்கு கவுன்டர் பூட்டி கிடந்தது. இதனால் ஏமாற்றத்துடன் பழைய கட்டிடத்திற்கு வந்து டிக்கெட் எடுக்க முயன்றனர்.

காலை 7 மணிக்கு சுமார் 500 பயணிகள் முன்பதிவற்ற மையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட கியூ ஒரு பக்கம் நிற்க, ரயிலில் அவசரமாக செல்ல வேண்டியவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் டிக்கெட் எடுத்து தரக் கேட்டு கொண்டதால் அப்பகுதியால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த ரயில்வே போலீசார் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். நெல்லை ரயில் நிலைய முன்பதிவற்ற கவுன்டர் அருகே பயணிகளுக்கு தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறையும் நடைமுறையில் உள்ளது. அந்த இயந்திரத்தை இயக்குபவரும் வராத காரணத்தால் பயணிகள் முண்டியடித்தனர். இதனால் ரயில்வே ஊழியர்களும், போலீசாரும் செய்வதறியாது விழித்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பின்பு தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டு அதன் மூலம் சில பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. பல பயணிகள் நாகர்கோவில், திருச்செந்தூர் ரயில்களை பிடிக்க டிக்கெட் எடுக்காமலே ஓடிச்சென்று ஏறினர்.

இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ரயில்வே துறையில் முன்பதிவற்ற மையங்களும், முன்பதிவு மையங்களும் முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இப்போது அவை இணைக்கப்பட்டு ஆட்குறைப்பு நடத்தப்பட்டு வருகிறது. பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமனம் இல்லை. இதன் காரணமாக டிக்கெட் கவுன்டர்களை திறக்க போதிய ஆட்கள் இல்லை. புதிய கட்டிடத்தில் முன்பதிவற்ற மையம் மூடி கிடந்ததால் இன்று(நேற்று) கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. காலையில் செல்லும் 5க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு 2 டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் கொடுப்பது இயலாத காரியம். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் நெல்லை ரயில் நிலையத்தில் கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்து போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆட்டோமெடிக் மிஷின் மூலம் முன்பதிவற்ற டிக்கெட்டுகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

Tags : Passenger Trail ,Nellai Junction Railway Station , Nellai Junction, train, passenger
× RELATED ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு...