×

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் பணப்பட்டுவாடா புகார்

நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால் அங்கு நடக்கும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க அல்லது ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக நகரம் முழுவதும் 300 அல்லது 500 ரூபாய் வழங்கி ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் மூலம் மக்களை அழைத்து செல்கின்றனர். அதே போல வாக்குக்காக பணம் கொடுப்பதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் சார்பில் நபர் ஒன்றுக்கு ரூ.1000 வரை வாக்குக்காக பணம் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தினால்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது . எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனு தள்ளுபடி


இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தேவைப்படும் போது மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Tags : Petition, dismissal, turnaround, by-election
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை