×

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சாயத்துணிகள் அலசப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு; குடிசைகள் அகற்றம்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குடிசை அமைத்து சாயத்துணிகள் அலசுவதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் நேற்று காவிரி ஆற்றில் ஆய்வு செய்து அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்றினர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீருக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது ஈரோடு பகுதிக்கு வருவதற்குள் 200 கனஅடியாக குறைந்து விடுகிறது. காவிரி ஆற்றில் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் நீரை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் சாக்கடை கழிவுகள் அதிகமாக வருவதால் துர்நாற்றம் வீசி வரும் நிலையில் கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஆற்றின் நடுவே குடிசை அமைத்து இரவு நேரங்களில் சாயத்துணிகளை அலசுவதாக புகார் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், மேட்டூர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு பரிசல் மூலமாக ஆற்றின் நடுவே குடிசை அமைத்திருந்த பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த குடிசையில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆற்றின் நடுப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது அங்கேயே ஆடுகளை அடைத்து வைப்பதற்காக குடிசை வீடு அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் குறைவாக செல்லும் நிலையில் சாயத்துணிகள் ஏதும் அலசப்படுகிறதா? என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர், ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த 2 குடிசைகளை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் குடிசை அமைத்து சாயத்துணிகளை அலசுவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக காவிரி ஆற்றில் குடிசை அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆற்றில் சாயத்துணிகள் ஏதும் அலசப்படவில்லை. ஆடுகளை அடைத்து வைப்பதற்காக குடிசை அமைத்திருந்தனர். அங்கிருந்த 2 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சாயத்துணிகள் அந்த பகுதிகளில் அலசப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்’ என்றார்.

Tags : Cauvery ,cotton roll ,Cottages , Erode, Karungapalayam, Cauvery River
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி