×

நீர் இருப்பு 10 அடியாக குறைந்தது... குட்டையாக மாறிய பாபநாசம் அணை

நெல்லை: வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம்கொழிக்கச் செய்து புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது. தாமிரபரணியில் கட்டப்பட்டுள்ள பாபநாசம் அணை மூலம் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட அணை, கடந்த டிசம்பரில் நிரம்பியதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. மேலும் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு ஜனவரி முதலே கோடை வெயில் கொளுத்தி வருவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்தது. கடந்த 2 மாதங்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் சுட்டெரிப்பதால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், குளங்கள் வறண்டு விட்டன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் மட்டும் ஓரளவு தண்ணீர் இருந்தது. இதில் பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 10.55 அடியாக உள்ளது. சிறு குட்டைப்போல் அணையில் தண்ணீர் காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக சூறைக்காற்றுடன் வெப்பசலன மழை பெய்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லை. கடும் வறட்சியே நிலவுகிறது. இதன் காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரும் பாதைகள் சிறிய ஓடைகளாக மாறியுள்ளன. அணையின் பெரும்பாலான பகுதிகள், மணல் திட்டுகளாக காட்சி தருகின்றன. பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதால் இப்பகுதி, பாலைவனம்போல் காட்சியளிக்கின்றன. அணையில் தற்போது தண்ணீர் தெரியும் இடத்தில் சேறும், சகதியும் அதிகமாக உள்ளது. அணைக்கு 1.19 கனஅடி நீர் கசிவு மட்டுமே வருகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 47.51 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.90 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 275 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் இருந்து 29.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் ஆற்றும் நீரும் ஓடைபோல் கலங்கலாக செல்கிறது. இதே நிலை மேலும் நீடித்தால் கோடை மழை கைகொடுக்காவிட்டால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : dam ,Papanasam , Papanasam Dam, Water Balance
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...