×

தட்டுப்பாட்டை போக்க மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 54,000 டன் மணல் காரைக்கால் வந்தது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க, மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 54 ஆயிரம் டன் ஆற்று மணல் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனை தொடங்கும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் உள் கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக மார்க் குழுமம் விளங்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் மார்க் கப்பல் துறைமுகம், தற்போது 5 பெர்த் வசதியுடன், கண்டெய்னர், உலர்ந்த மற்றும் திரவப்பொருள் சரக்குகளை கையாளும் வசதியுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுகத்தில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி, ஜிப்சம், சர்க்கரை, சுண்ணாம்பு கல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்ட கட்டுமான பணிக்கு தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் ஆற்று மணல், அண்மைக்காலமாக கடும் கட்டுப்பாடும் அதனால் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டம் முழுவதும் கட்டுமானம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, பல்வேறு தரப்பினர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு முதல்வர் பதில் கூறுகையில், விரைவில், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி அமைச்சரவை, வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்து, அதற்கான உத்தரவுகளை வழங்கியது. தொடர்ந்து, அபான் என்ற நிறுவனம் மலேசியாவிலிருந்து அதாஷ் என்ற கப்பல் மூலம் 50 ஆயிரம் டன் மணலை காரைக்கால் மார்க் துறைகத்திற்கு கொண்டுவந்தது. இந்த மணல் கடந்த 2 நாட்களாக இறக்குமதி செய்யும் பணி நடைபெற்றது.

நேற்று கலெக்டர் விக்ராந்த்ராஜா, தனியார் துறைமுகத்திற்கு நேரில் சென்று, மணலை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, துணை கலெக்டர் ஆதர்ஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறியது: புதுச்சேரி அரசின் ஒப்புதல்படி, சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணல் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, காரைக்கால் கொண்டுவரப்பட்ட மணலை வேளாண்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் மணலை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை வந்தவுடன் சட்ட விதிகள்படி இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படும். என்றார்.

Tags : Malaysia , Karaikal, sand scarcity, river sand, Malaysia
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...