×

மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை கூட்டாட்சி முன்னணி கோரும் : டி.ஆர்.எஸ். செய்தி தொடர்பாளர் ரசூல் கான்

ஹைதராபாத் : மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரசின் ஆதரவை கூட்டாட்சி முன்னணி கோரும் என்றும், ஆனால் தலைமை வகிக்கும் பொறுப்பை காங்கிரசிடம் அளிக்காது என என டி.ஆர்.எஸ். செய்தி தொடர்பாளர் ரசூல் கான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி தொடங்கியது. இறுதிகட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.எஸ். செய்தி தொடர்பாளர் ரசூல் கான், ஆட்சி அமைப்பதற்கு கூட்டாட்சி முன்னணிக்கு போதிய எம்.பி.க்கள் இல்லை என்றால் காங்கிரசின் ஆதரவு கோரப்படும் என்றும், அதேநேரத்தில் தலைமை பொறுப்பு காங்கிரசிடம் வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்க வேண்டும் என்பதில் டி.ஆர்.எஸ். உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமர் பதவி கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிக்கே அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் கருத்து ஒற்றுமை அடிப்படையில் பிரதமர் யார் என முடிவு செய்யப்படுவார் என்றும், காங்கிரசுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால் அந்த கூட்டணியில் திமுக இருந்து பலனில்லை என்றும் ரசூல் கான் கூறியுள்ளார்.


Tags : government ,DRS Spokesperson Rasool Khan , Congress, Lok Sabha Election, TRS, Rasool Khan, Chandrasekara Rao
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...