2 நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்த கமல்ஹாசன், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்திருந்தார்.

தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் சர்ச்சை கருத்து

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் இப்படி பேசவில்லை. காந்தியின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியில் மானசீகப் கொள்ளுப் பேரனாக என்னை கருதுகிறேன்.

அவரது கொலைக்கு பின்னணிக் கேட்டு நான் வந்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் சமரசம் தலைத்தோங்கி இருக்க வேண்டும். மூவரண கோடியில் இருக்கும் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக நம் நாடு இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் எண்ணம். நான் ஒரு நல்ல இந்தியன் என்பதை மார்தட்டிச் சொல்வேன் என்று கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசினார். கமல்ஹாசனின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

கமல்ஹாசன் பிரசாரம் ரத்து

இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மேற்கொள்ள இருந்த பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு பெற்ற வளரும் தமிழகம் கட்சி வேட்பாளர் எம். காந்தியை ஆதரித்து கமல்ஹாசன்  வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டு விட்டது.பிரசாரம் செய்வதற்கு அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி கிடைக்காததால்தான் கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் கமல் ஹாசன் பிரசாரம்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட கமல், திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். கொடைக்கானலில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு காரில் கமல்ஹாசன் செல்வதால், கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் - தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் நாளை அரவக்குறிச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன்  பங்கேற்பதாக மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan ,campaign ,announcement , Kamal Hassan, Controversy, People's Justice, Nathuram Godse, Propaganda
× RELATED இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான...