×

பயணிகள் தொடர் புகார் எதிரொலி சானடோரியம் பேருந்து நிலையத்தில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு: அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல நகைக்கடை, மருத்துவமனை, நீதிமன்றம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்கள், அங்குள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வந்து பஸ் பிடித்து தங்களது பகுதிகளுக்கு செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது. இதனால், பலர் பஸ் நிலைய வளாகத்தில் திறந்த நிலையில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், போதிய இருக்கை வசதி இல்லை. இரவு நேரங்களில் சிலர் பேருந்து நிலையத்திலேயே மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், பெண் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து தாம்பரம் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று காலை அவர் அதிகாரிகளுடன் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறையில் பழுதான மின்விளக்குகள், உடைந்த உபகரணங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பயணிகள் முகம் மற்றும் கைகளை கழுவ உதவியாக ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் அருகே வாஷ்பேஷின் அமைக்க வேண்டும்.பேருந்து நிலையத்தில் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்ய வேண்டும். கால்வாயை சுத்தம் செய்வதுடன், ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றவேண்டும். பயணிகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.  தாய்மார்கள் பால் ஊட்டும் அறை அருகில் வாஷ் பேஷின் அமைக்கவேண்டும். பேருந்து நிலையத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.



Tags : Facilities , Passengers ,suddenly, examined, basic facilities
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...