×

சவுதி அரேபியாவில் ஆளில்லா விமானம் மூலம் கச்சா எண்ணெய் குழாய் மீது தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள் நாசவேலை

ரியாத்: சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்தார். தென் மேற்கு நாடான ஏமனில் சன்னி, ஷியா பிரிவினர்களிடையே நடந்து வரும் உள்நாட்டு போரில், சன்னி பிரிவை சேர்ந்த அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இதனால், ஷியா பிரிவை சேர்ந்த ஹூதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.  ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்துவதால் அவர்களும் அதிரடியாக பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 6.30 மணியளவில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இரண்டு முக்கிய பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் உள்ள கச்சா எண்ணெய் குழாய்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெடிமருந்து நிரப்பிய  ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து செங்கடல் பகுதிக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ள குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சவுதி அரேபியா எரிசக்தி, தொழில் மற்றும் தாது வளங்கள் துறை அமைச்சர் காலித் அல் பாலி கூறுகையில், ``நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் பெட்ரோல் நிலையங்கள் எண் 8, 9 சேதமடைந்து உள்ளன. இந்த தாக்குதலில்  கிழக்கு மாகாணத்தில் இருந்து மேற்கில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு சொல்லும் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. அரேபிய வளைகுடாவில் நடத்தப்பட்ட இந்த நாசவேலையின் மூலம் சவுதிக்கு மட்டுமல்லாமல்  உலக நாடுகளுக்கான பெட்ரோல் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றுள்ளனர். ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களை அரசு  எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது,’’ என்றார்.இதனிடையே சவுதி அரசுக்கு சொந்தமான ஆரம்கோ எண்ணெய் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம், சேத நிலவரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களை சீர் செய்யும் வரை அதற்கான  வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மற்றபடி அதன் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.

Tags : Saudi Arabia ,attacks ,crash ,Hoodi , drones,Saudi Arabia, Attack, oil pipe, Hoodie ,sabotage
× RELATED நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்திற்கு...