×

வெடிகுண்டு தாக்குதல் பதற்றம் தணியவில்லை இலங்கையில் வீடுகளுக்கு தீவைப்பு: வன்முறையில் ஒருவர் அடித்து கொலை

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து வன்முறை வெடித்துள்ளது. இதில், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். முஸ்லிம் மக்களின் வீடுகள், மசூதிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று, தேவாலயங்கள், ஓட்டல்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 258 பேர் பலியாயினர். இத்தாக்குதலை ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உதவியுடன் உள்நாட்டை  சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு (என்டிஜே) நடத்தியதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது. என்டிஜே அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துகள் அங்கு பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு வன்முறை வெடிக்கத் தொடங்கியது. தவறான வதந்திகள் பரவுவதை தடுக்க நேற்று முன்தினம்  சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.ஆனாலும், நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களின் வீடு, கடைகள் மற்றும் மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்களர்கள் அதிகம் வாழும் வடமேற்கு  மாகாணத்தில் வன்முறை தீவிரமாகி உள்ளது. அங்கு முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை கும்பல் கம்பு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல்  நடத்தியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கேபினட் அமைச்சருமான ராப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவையும் மீறி இத்தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. சில இடங்களில்  பாதுகாப்பு படையினரே முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீயில் எரிக்கப்பட்டது போன்ற பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. இதனால் வன்முறையை கட்டுப்படுத்த வடமேற்கு  மாகாணத்தில் மட்டும் நேற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

என்டிஜே உட்பட 3 அமைப்புக்கு தடை
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) உட்பட 3 அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், என்டிஜே, ஜமாதி மிலாதி  இப்ராகிம் (ஜேஎம்ஐ) மற்றும் விலாயத் அஸ் சைலானி (டபிள்யுஏஎஸ்) ஆகிய அமைப்புகளுக்கு அதிபர் சிறிசேனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள் (டிரோன்) பயன்படுத்தவும் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

25 பேர் கைது
முஸ்லிம் மக்களின் வீடு, கடைகளை சூறையாடியது, தீ வைத்தது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட சுமார் 25 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க பேஸ்புக், வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து  டிவிட்டர் சமூக வலைதளமும் நேற்று முடக்கப்பட்டது. காவல்துறை தலைவர் சந்தனா விக்ரமரத்னே கூறுகையில், ‘‘கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஜாமீன் தரப்படாது. 10 ஆண்டு சிறை தண்டனை  பெற்றுத்தரப்படும்’’ என எச்சரித்துள்ளார். இதற்கிடையே வன்முறையை தடுக்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதிலும், அரசு தோல்வி அடைந்துவிட்டதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  விமர்சித்து வருகின்றனர்.

Tags : island fire ,men ,Sri Lanka , bomb attack, worsened, Fireworks, Sri Lanka
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...