×

கொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணியில் வன்முறை: கறுப்பு கொடி காட்டியதால் ஆத்திரம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் திடீர் வன்முறை ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கறுப்பு கொடி காட்டியதால் ஆத்திரமடைந்த பாஜ தொண்டர்கள் கல்வீசி தாக்கி,  வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.மக்களவை தேர்தலின் கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி , பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டள்ளார். அங்கு ஜாதவ்பூரில் அவர் பங்கேற்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி தர  மாநில அரசு அனுமதி மறுத்தது. மேலும், அங்கு அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கவும் அனுமதி தரப்படவில்லை. இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும்,  பாஜ தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று பிரமாண்ட சாலைப் பேரணியில் அமித்ஷா பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி மாலை 4.30 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணியில் ஏராளமான பாஜ தொண்டர்கள் பங்கேற்றனர்.  சாலையெங்கும் மரிக்கொழுந்து பூத்தோரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இப்பேரணி கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தை கடந்து சென்றது. அப்போது பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதாக கூறப்படுகிறது. ‘அமித்ஷா திரும்பிப் போ’ என அவர்கள் கண்டன  கோஷமிட்டனர். அங்கிருந்து அமித்ஷாவின் பேரணி வாகனம் புறப்பட்டு சென்ற சில மணி நேரத்திற்கு பிறகு, பெரும் வன்முறை வெடித்தது.காவி உடையணிந்த கும்பல் கல்லூரி நுழைவாயிலை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மார்பளவு சிலைகள் அடித்து  உடைக்கப்பட்டன. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து வன்முறை கும்பல் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. இதுகுறித்து பாஜ தொண்டர்கள் கூறுகையில், ‘‘பாஜவுக்கு எதிராகவும், அமித்ஷாவுக்கு எதிராகவும் மாணவர்கள் போர்வையில் திரிணாமூல் கட்சியினர் கோஷமிட்டனர். அவர்களுக்கு போலீசாரே உதவினர். அவர்கள் தடுப்புகளை மீறி வந்து கோஷமிட்டனர். அந்த மாணவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் மாணவரணி பிரிவைச் சேர்ந்தவர்கள்’’ என்றனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : rally ,Amit Shah ,Kolkata , Held, Kolkata Violence ,t Amit Shah ,rally, rage because ,showing black flag
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!